Monday, November 12, 2007

1. ராவணசீதை

அந்திக்கருக்கலில் ஆகாயம் இருளைப் போர்வையாக்கி கருமை பூண்டிருந்தது. மேற்கு வானில் கதிரவனின் சுவடுகள் மறைந்து வான்வெளியில் நட்சத்திரச் சிமிட்டல்கள் ஆரம்பமாகி இருந்தன.

இன்னமும் தார் போடப்படாமல் செம்மண்ணில் புதைந்த சல்லிகளோடு கிராமத்துச் சாலை கருஞ்சிவப்பாக முன்னோட, இருந்த ஒன்றிரண்டு சாலையோர மின்கம்பவிளக்குகளும் காலாவதியான பல்புகளால் மரணித்திருந்தன.

சித்ரா அந்தச் சாலையில் வேகமாக நடந்தாள். இருபுறமும் வயல்வெளிகள். மக்கள் நடமாட்டம் எதுவும் இல்லை. சில் வண்டுகளின் ஓசை அச்சத்தைத் தந்தது. நெடுஞ்சாலையை அடைய இன்னும் எவ்வளவு தொலைவு செல்ல வேண்டுமோ?
இந்த ஊருக்கு இதற்கு முன்பே இரண்டுமுறை வந்திருந்த போதிலும் அப்போதெல்லாம் தோழி மாலதியோடுதான் வந்திருக்கிறாள். இன்றுதான் தனியாக வரும்படி நேர்ந்துவிட்டது.

தோளில் மாட்டியிருந்த பையின் கனத்தை விட மனதின் பாரம்தான் அதிக சுமையாகப் பட்டது அவளுக்கு. கடவுளே! வந்த காரியம் இப்படியாகி விட்டதே? இனி பாஸ்கரின் ஊருக்கே போய்ப் பார்க்கலாமா?

இப்போதே மணி ஏழு ஆகி விட்டது. இனி பஸ்டாண்ட் போய் பஸ் பிடித்து திருச்சி போய்ச்சேர எப்படியும் பதினோரு மணி ஆகிவிடும். அந்த நேரத்தில் எப்படித்தான் வீட்டைக் கண்டுபிடிப்பது?

அதற்குள் மழைத்தூறல் ஆரம்பித்திருந்தது. கை அனிச்சையாக பையைத் தடவிய நொடியில் குடை எடுத்துவரவில்லை என்பது நினைவுக்கு வந்தது. மழையும் வலுக்க ஆரம்பித்தது. ஒதுங்க இடமும் இருக்கவில்லை. நனைந்துகொண்டே ஓட்டமும் நடையுமாக சித்ரா அந்த செம்மண் சாலையில் விரைந்தாள். நுரைத்து ஓடிய மழைநீரில் செம்மண் குழைந்து சகதியாக புதைந்தது.

சாலைத்திருப்பத்துக்கு அருகில் வந்ததும் அந்த தகர ஷெட் கண்ணில் பட்டது. அதில் முன்புறம் வராந்தா போல திறந்திருந்தது. சித்ரா ஓடிச் சென்று அங்கே நின்று கொண்டாள். மழை அதிகரித்து காற்றும் துணைக்கு வந்ததில் சாரல் பயங்கரமாக விசிறியடித்தது. நனைந்திருந்த சித்ராவுக்கு குளிரில் உடல் நடுங்க ஆரம்பித்தது.

எவ்வளவு நேரம் அப்படியே நின்றிருந்தாளோ என்னவோ நினைவுக்கு வந்ததும் கடிகாரத்தை திருப்பி நேரம் பார்த்தாள். ஒளிரும் முட்களில் மணி எட்டரை ஆகியிருந்தது.ஒன்றரை மணிநேரமாகவா மழை பெய்து கொண்டிருக்கிறது?

மின்னலும் இடியும் இருளின் கருமையும் ஆளரவமற்ற சூழலும் அவளை அச்சத்தின் எல்லைக்கே கொண்டு சென்றது. குளிரில் விறைத்த உடல், வயிற்றில் பசியும் உதிக்க ஆரம்பித்தது. காலையில் சாப்பிட்டது தான். மதியம் அவள் எதுவுமே சாப்பிடவில்லை.

மழை இன்னும் சொட்டிக் கொண்டிருக்க சித்ரா என்ன செய்வது என்று புரியாமல் பசிக்கும் குளிருக்கும் நடுங்கிக் கொண்டு அங்கே நின்றுகொண்டிருந்த போது சரசரவென்று சப்தம். யாரோ வருகிறார்கள். சாலையில் திரும்பிய அந்த உருவம் நேராக சித்ரா நின்றிருந்த ஷெட்டிற்குத் தான் வந்தது. தலையை முண்டாசுக் கட்டிக் கொண்டு ஒரு முரட்டுத் துணியால் போர்த்திக் கொண்டு வந்த அந்த உருவம் திண்ணையில் ஏறியது.

ஈரப்போர்வையை ஓரமாக தூக்கி எறிந்தவன் தலையில் சுற்றியிருந்த துண்டை எடுத்து தலையைத் துவட்ட ஆரம்பித்தான். பிறகு சட்டையைக் கழற்றி உடலைத் துவட்டினான். சுவரோரம் நின்றிருந்த சித்ராவை அவன் கவனிக்கவில்லை.

இருட்டிலேயே ஷெட்டின் உள்ளறைக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே போனான். கெரசின் விளக்கு ஒன்றைப் பொருத்தினான். விளக்கொளியில் வாசலில் நிழலாடக் கண்டு யாரோ நின்றிருப்பதை அறிந்து விளக்கோடு வெளியே வந்தான்.

அவளின் கோலம் கண்டதுமே மழைக்கு ஒதுங்கிய மங்கை என்று புரிந்தது அவனுக்கு. அவனுடைய இருப்பிடத்துக்கு ஒரு பெண், அதுவும் ஒரு நல்ல குடும்பத்துப் பெண் வரமாட்டாள் என்று அவனுக்குத் தெரியும். அவனைப்பற்றி அறிந்தவர்கள் அவன் பார்வையில் படவே அஞ்சினார்கள். அப்படியிருக்க அவன் வாசலில் ஒரு பெண் நின்றிருந்தாள் என்றால் ஒன்று அவள் நெறி பிறழ்ந்தவளாக இருக்க வேண்டும், அல்லது அவனைப்பற்றி அறியாதவளாக இருக்க வேண்டும்.

சித்ராவைப் பார்த்ததுமே அவள் அறியாமல் வந்தவள்தான் என்பதை அவன் உணர்ந்து கொண்டான். புலிக்குகைக்குள் புள்ளிமான் வரலாமோ?